அரசு அலுவலர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் த.அமிர்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜான் வெலிங்டன், பிரசாரச் செயலாளர் மணிகண்ட பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மா.சம்பந்தமூர்த்தி வரவேற்றார்.
அரசாணையில் இடம்பெறாத சங்கங்கள் அழைத்தால் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது.திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்று, கெளரவப்படுத்திய மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டு தெரிவிப்பது, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் முன் அரசு அலுவலர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் திருமலை கண்ணன், இலக்கிய அணிச் செயலாளர் செளந்தராஜன், மகளிரணிச் செயலாளர் குந்தவி ஆகியோர் பேசினர்.
வட்டக் கிளைத் தலைவர்கள் மணிவண்ணன் (சீர்காழி), பாஸ்கர் (மயிலாடுதுறை), அமிர்தலிங்கம் (தரங்கம்பாடி), மோகன் (நாகை), மாதவன் (குத்தாலம்) உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் இரா.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment