இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
அதேபோல, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் இரண்டு இலக்க கழித்தல் கணக்குகளையும், 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் வகுத்தல் கணக்குகளையும், 8-ஆம் வகுப்பு மாணவர்களில் 56 சதவீதத்தினரால் 3 இலக்க எண்களை ஓர் இலக்க எண்ணால் வகுக்கும் கணக்குகளையும் போட முடியவில்லை.
19.5 சதவீத 2-ஆம் வகுப்பு மாணவர்களால் 9 வரையுள்ள எண்களை அடையாளம் காண முடியவில்லை. 75 சதவீத 5-ஆம் வகுப்பு மாணவர்களால் எளிமையான ஆங்கில வாக்கியங்களைப் படிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மிகமிகக் குறைவான தொகையே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. 1966-இல் கோத்தாரி கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றது.
அதன்படி, 1985-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 3.1 முதல் 3.8 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கல்விக்கு 2010-11-இல் 2.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 2011-12-இல் 3.57 லட்சம் கோடியாகவும், 2012-13-இல் 4.10 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. 1951-52-இல் கல்விக்கு ரூ.64.46 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.64 சதவீதமாகும்.
இது 2010-11-இல் 2.97 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05 சதவீதமாகும். இந்த காலகட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. உலகில் உள்ள 124 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்குக் கட்டடங்கள் கட்டுதல், வகுப்பறைகள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல், பாடப் புத்தகங்கள், மற்ற வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' தெரிவிக்கிறது.
இதற்கு இணையாக 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கல்விக்காக செலவழிக்கப்படும் அதிக நிதியால், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக 2014-இல் மத்திய அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்கும் 14,25,564 கல்வி நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 7,90,640 தொடக்கப் பள்ளிகளும், 712 பல்கலைக்கழகங்களும், 36,671 கல்லூரிகளும், பட்டயக் கல்வி வழங்கும் 11,445 நிறுவனங்களும் அடங்கும்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 82.68 லட்சமாகும். இதில் 26.84 லட்சம் பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். 25.13 லட்சம் பேர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள். 12.86 லட்சம் பேர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். 17.85 லட்சம் பேர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
நாட்டில் உள்ள அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஆசிரியர்கள் ஆவர். சுமார் 160 நாடுகளில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழல் பள்ளிகளில் இல்லை. மத்திய அரசு 2013-14-இல் தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 5-ஆம் வகுப்புக்கு முன்னரே 19.8 சதவீத மாணவர்கள் வெளியேறுகின்றனர். 8-ஆம் வகுப்புக்கு முன்னர் 36.3 சதவீதத்தினரும், 10-ஆம் வகுப்புக்கு முன்னர் 47.4 சதவீதத்தினரும் கல்வியைக் கைவிடுகின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால், 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை, 8 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிடுகின்றனர். இந்த நிலையை "தேசிய அவசரநிலை' என்று வர்ணிக்கிறது ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் அமைப்பு.
குழந்தைகள் இடைநிற்றலுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கியமான காரணம் என்பது வேதனை தரும் அம்சமாகும். வகுப்பறைகளில் சுமார் 850 மணி நேரம் ஆய்வு செய்த பின்னர், மாணவர்களுக்கு உகந்த நடைமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என கல்வி தொடர்பான வருடாந்திர ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.