மத்திய பிரதேசத்தில் வனக்காவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முறை கேட்டில் மத்திய பிரதேச மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவும் (வயது 86) நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையையும் (எப்ஐஆர்) பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச கவர்னர் ராம்நரேஷ் யாதவை பதவியில் இருந்து விரட்டும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. தேர்வு வாரிய முறைகேட்டில் உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால், உடனே கவர்னர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று மத்திய உள்துறை ராம்நரேஷ் யாதவிடம் கேட்டுக் கொண்டது.
உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் கொடுக்கப்பட்டு இருப்பதால் கவர்னர் பொறுப்பில் தொடர்ந்து நீங்கள் பணியாற்றுவதை ஏற்க இயலாது என்றும் ராம் நரேஷ் யாதவிடம் மத்திய உள்துறை கண்டிப்புடன் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ராம்நரேஷ் யாதவ் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். மோசடி வழக்கில் சிக்கியுள்ள முதல் கவர்னர் ராம் நரேஷ் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் நரேஷ் யாதவ் தற்போது பதவி விலகிவிட்டதால் அவர் மீது சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment