பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, ’ஜாக்டோ’ ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் காத்திருந்த ஆசிரியர் குழுவினர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
15 கோரிக்கைகள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் வழங்குதல்; தன் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 கோரிக்கைகள், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன. இதற்காக, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ’ஜாக்டோ’ கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு சார்பில் மார்ச், 8ம் தேதி மாவட்டங்களில் பேரணி, தொடர் போராட்டத்துக்கு முடிவானது. இதையறிந்து, முதல்வருடன் பேச்சு நடத்த வருமாறு, ’ஜாக்டோ’ குழுவுக்கு அரசு அழைப்பு விடுத்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு முதல்வரை சந்திக்க, ’ஜாக்டோ’ குழுவினர் தலைமைச் செயலகம் வந்தனர்.
முதலில், போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. பின், தனித்தனியாக பெயர் மற்றும் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து, தலைமைச் செயலகத்திற்குள் அனுமதித்தனர். முதல்வர் அறைக்கு அருகில், 15 பேர் கொண்ட குழு காத்து நின்றது. அவர்களின் மொபைல் போன்கள் தனியாக வாங்கி வைக்கப்பட்டன. ஆனாலும், நீண்ட நேரமாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு அழைப்பு வரவில்லை; அமர இருக்கைகளும் இல்லை.
தகவல் இல்லை:
ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருந்தது. அதில், மூத்த நிர்வாகி மட்டும் காத்திருந்தார்; மற்றவர்கள் நின்றனர். மூன்று மணி நேரம் கடந்த பின்னும், முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் வராததால், ஆசிரியர் சங்கத்தினர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பின்னர், ’ஜாக்டோ’ குழுவினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். அரசே அழைத்துவிட்டு, நீண்ட காத்திருப்புக்குப் பின், திருப்பி அனுப்பியது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘போராட்டம் திட்டமிட்டபடி தொடரவும், மார்ச் 8ம் தேதி, மாவட்ட வாரியாக பேரணி நடத்தவும் முடிவெடுத்துள்ளோம்’, சத்தியமூர்த்தி, மாநிலப் பொதுச் செயலர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்
‘அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், பேச்சு நடக்கவில்லை. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். மீண்டும், அரசு அழைத்தால் பேச்சு நடத்த வருவோம்’, ரங்கராஜன், ’ஜாக்டோ’ உயர்மட்டக்குழு உறுப்பினர்
No comments:
Post a Comment