கோவை மாவட்டம், முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் பிளஸ் 2 வகுப்பு நடக்கும் அவலத்தை கண்டு வருந்திய முன்னாள் மாணவர்கள், 3 லட்சம் ரூபாய் செலவில், மூன்று வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர்.
கோரிக்கை: கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லை கிராமங்களில், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பும்
மாணவர்கள், கிணத்துக்கடவு அல்லது மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். பல கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் செல்வதை தவிர்க்க எண்ணிய, கிணத்துக்கடவு ஒன்றியம், முத்துக்கவுண்டனூர் வட்டார மக்கள், தங்கள் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கென, கடந்த, 1970ல், முத்துமலை முருகன் கோவிலுக்கு அருகில், 5 ஏக்கர் விவசாய நிலத்தை, நல்லாக்கவுண்டர் என்பவர், தானமாக வழங்கினார். இந்த இடத்தில் பள்ளி யும் கட்டப்பட்டது. பள்ளியை அப்போதைய அமைச்சர்கள் சாதிக்பாட்சா, நடராஜன் திறந்து வைத்தனர்.
ஆசிரியர்களின் சீரிய கற்பிக்கும் முறையால், பள்ளியின் தேர்ச்சி வீதம் படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு, 90 சதவீதமாக அதிகரித்தது. அதே ஆண்டு பள்ளி யின் தரம் உயர்த்தப்பட்டு, மேல்நிலைப் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. பிளஸ் 1 வகுப்பு துவங்கிய நிலையில், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, பிளஸ் 2 வகுப்புகள் முடியும் நிலையி லும், கூடுதல் கட்டடம் கட்டப்படவில்லை.
பாழடைந்த...:
இச்சூழலில், துவக்க காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் வலுவிழந்து, பராமரிப்பு இன்றி, பாழடைந்த பங்களாவாக காட்சி அளித்தது. கட்டட பற்றாக்குறையால், பிளஸ் 2 வகுப்புகள் மரத்தடியில் செயல்பட்டன. மழை காலத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதிக்குள்ளாயினர். இதையறிந்து, இப்பள்ளியில் படித்த, முன்னாள் மாணவர்கள், உதவ முன் வந்தனர். ஆடிட்டராக பணியாற்றும் ஞானசுந்தரம், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி பேராசிரியர் கனகராஜ், தமிழக அரசின் கைத்தறித்துறை உதவி இயக்குனர் முத்துச்சாமி, விவசாயி சிவராஜ் உள்ளிட்ட, முன்னாள் மாணவர்கள், 250 பேர் ஒன்றிணைந்து, ? லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். இதை பயன்படுத்தி, கடந்த, 1970ல் கட்டப்பட்டு, பழுதடைந்து, பயன்பாடற்ற நிலையில் இருந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மூன்று வகுப்பறைகள் உள்ளன. தற்போது மழை, வெயிலில் வாடும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயிலவும் வழி கிடைத்துள்ளது. முன்னாள் மாணவர்களின் முயற்சியை அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று, இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கவும் முன்வந்துள்ளது.
No comments:
Post a Comment