உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.
ஊக்க ஊதியம்: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியமும், பின் எம்.எட்., பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படும். இந்நிலையில், 2013 ஜனவரியில், பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., முடித்து உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
மேலும் எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியத்துக்கு தகுதியுடையவர்களாவர் என்று கூறப்பட்டிருந்தது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பதற்குப் பதிலாக, வெறும் பட்டதாரி ஆசிரியர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எழுத்துப் பிழையால் நடந்த இந்தப் பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் மற்றும் செயலரிடம் இதுகுறித்து மனு அளித்தது. மனுவை ஆய்வு செய்த, பள்ளிக்கல்வி செயலர் சபீதா, அரசாணையின் தவறை திருத்தி புதிய ஆணை பிறப்பித்துள்ளார். பிப்., 12ம் தேதியிட்ட அரசாணைப்படி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நன்றி: இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
1 comment:
From which date? Either from the date of qualification or from the date of GO ? Which is applicable? Has it been clarified in the GO>
Post a Comment