சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் அனூப் நிஷாந்த். இவர், சிவகங்கை எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் அளித்த புகார்: சென்னையில், ’மேக்ஸ் ஸ்பீடு டிசைன்ஸ்’ நிறுவனம் மூலம் புகை வெளியிடாத டூவீலர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது மானாமதுரையைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் மணிகண்டன் அறிமுகமானார்; பகுதி நேர பணியில் சேர்ந்தார்.
கடந்த 2014ல், பேட்டரியில் ஓடும், ’இ-100’ என்ற டூவீலர் உருவாக்கினேன். பேட்டரியை, மூன்று மணி நேரம், ’சார்ஜ்’ செய்தால், 200 கி.மீ., வரை ஓடும். இதை, மணிகண்டன் மானாமதுரைக்கு எடுத்துச் சென்றார். சில நாட்களுக்கு முன் போனில் பேசிய அவர், ”டூவீலர் தயாரிப்பில் என் பங்கும் உள்ளது. எனக்கு, 50 சதவீத பங்கு தரவேண்டும்” என்றார்.
எனக்கு உதவி செய்தவர் என்பதால், 20 சதவீத பங்கு தர சம்மதித்தேன். இதற்கிடையே கடந்த,18ம் தேதி பேட்டரி டூவீலரை தன்னுடைய தயாரிப்பு என மானாமதுரையில் அறிமுகம் செய்தார். இதன்மூலம் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்திருந்தார். மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment