பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் சிலர், பல்வேறு காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல் போயிருக்கலாம். அவர்களின் நலன் கருதி, 'தக்கல்' முறை எனப்படும் சிறப்பு அனுமதி முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 'ஆன்- லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது என்பதால், இதற்கென மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் மூலம் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
சேவை மையங்களின் விபரத்தை www.t:dge.i: என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது, அனைத்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் : அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே, கருத்தியல் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விட்டவர்கள் மட்டுமே இந்த 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்றதற்கான ஆதாரத்தை, பயிற்சி நடந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்று, அதை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோற்றவர்கள், தோல்வியுற்ற பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோற்றவர்கள், அறிவியல் பாடத்தை தவிர பிற பாடங்களை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்திருந்தால், 80 சதவீத வருகைப்பதிவுடன் அறிவியல் செய்முறை பயிற்சியில் பங்கேற்றிருப்பது அவசியம்.
தேர்வு கட்டணம் : வழக்கமான தனித்தர்வு கட்டணமான ரூ.125 மற்றும் 'தக்கல்' கட்டணம் ரூ.500, மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675 சேவை மையங்களில் பணமாக கட்ட வேண்டும்.
சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேவண்டிய ஆவணங்கள்: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோற்றவர்கள், தோற்ற பாடத்தின் மதிப்பெண் பட்டியல் நகலை, கையெழுத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் தேர்வெழுத, செய்முறை பயிற்சி பெற்றதற்கான அத்தாட்சியை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக, முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள், எட்டாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழின் அசலை சமர்ப்பிக்க வேண்டும்.
ஹால் டிக்கெட் : ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு, கோவை, சென்னை, வேலூர், கடலூர், திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் இருக்கும். தேர்வு மையங்கள் குறித்த விபரங்கள், ஹால் டிக்கெட்டில் இடம்பெறும். இது விண்ணப்பிக்காமல் விட்ட தனித்தேர்வர்களுக்கு, தேர்வு எழுத நல்ல வாய்ப்பாகும்.
No comments:
Post a Comment