பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குக் கையேடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வுப் பணியில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு அலுவலர்களாகவும், பத்தாம் வகுப்புத் தேர்வுப் பணியில் 1.20 லட்சம் ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர்.
தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவோருக்கான பல்வேறு அறிவுரைகள் இந்தக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
அந்தந்த மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் அறைக் கண்காணிப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு அலுவலர்கள் அனைவரின் செல்லிடப்பேசிகளும் அணைக்கப்பட்டு, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
அவசரத் தேவைக்கு மட்டும் மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அலுவலக அறையில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிந்ததும் தேர்வுக்கு வராதவர்களின் விவரங்களை பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள்
www.tndge.in என்ற இணையதளத்தில் முதன்மைக் கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள வசதி இல்லாத இடங்களில், அருகில் உள்ள தேர்வு மையத்தின் கணினி வசதியைப் பயன்படுத்தலாம் அல்லது மாவட்டக் கல்வி அலுவலக உதவியுடன் பதிவேற்றம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment