பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள, 300 உதவி பொறியாளர் பணியிடங்களை, விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு கடிதம் எழுதப்பட உள்ளது.
பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத்துறை உட்பட, பல பிரிவுகள் உள்ளன. இவற்றில், 500 உதவி பொறியாளர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்தன. கடந்த ஆண்டு, 202 உதவி பொறியாளர்களை நியமனம் செய்ய, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., எழுத்து தேர்வை நடத்தியது. இதில் தேர்வானவர்களுக்கு, சில நாட்களுக்கு முன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இருப்பினும், இன்னும் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், தற்போதுள்ள பொறியாளர்கள், கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பணியிடங்களையும் நிரப்பும் ஏற்பாடுகளை, பொதுப்பணித் துறை, தற்போது துவக்கி உள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித் துறையில், தற்போது காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓரிரு நாட்களில், டி.என்.பி.எஸ்.சி.,க்கு கடிதம் எழுதப்படும்.
இதன்மூலம், பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள அனைத்து உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்படும். தற்போதுள்ள பொறியாளர்களின் பணிச்சுமையும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment