இந்தியா தொழில்திறன் மிக்க நாடாக உருவாக பள்ளிக் கல்வியில் மாற்றம் அவசியம் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா, அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உறுப்பினர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொன்விழா ஆண்டு கல்வெட்டை குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திறந்து வைத்து பேசியதாவது:
பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு இரண்டு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அவற்றில் ஒன்று மதிப்பெண் சான்றிதழாகவும், மற்றொன்று உலகளாவிய திறன் மேம்பாட்டுச் சான்றிதழாகவும் இருக்க வேண்டும். இந்த 2- ஆவது சான்றிதழை வழங்குவதற்காக இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 சதவிகிதம் குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும்.
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதி வாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
ஆந்திரத்திலும், தமிழகத்தில் கோவையிலும் "வளரும் இந்தியா 2020' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான் அளித்த 10 உறுதிமொழிகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், இடைநின்ற மாணவர்களுக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த லட்சியம் வெற்றியடைந்தால் ஒவ்வொரு மாணவனின் லட்சியமும் வெற்றியடையும் என்றார்.
No comments:
Post a Comment