தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புதுமையான சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கூறினார். தமிழ் இலக்கியப் பாசறை மற்றும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கம் சார்பில் "கலாமைப் பாடிய கவிக் குயில்கள்' நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஆர்.எஸ். புரம் அன்னபூர்ணா கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். தமிழ் இலக்கியப் பாசறைத் தலைவர் மா.இளங்கீரன், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்க மாவட்டத் தலைவர் சாவித்திரி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், "கலாமைப் பாடிய கவிக்குயில்கள்' என்ற நூலை வெளியிட, அதை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னராஜ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பொன்ராஜ் பேசியதாவது:
தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே நல்ல சிந்தனைகளையும், புதுமைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். அதற்கு நமது தமிழறிஞர்கள் அனைவரும் சேர்ந்து அனைத்துப் பாடங்களையும் தமிழில் கொண்டு வரும் பணியில் இறங்க வேண்டும். இந்தியா உற்பத்தியில் 58-ஆவது இடத்தில் உள்ளது. கண்டுபிடிப்புகளில் 148-ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம், இந்தியாவில் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் அங்கீகாரம் கொடுப்பதால் அனைவரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
எத்தனையோ இந்திய திறமைசாலிகள் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல இடத்தில் உள்ளனர். தாய்மொழியில் கல்வி கற்றிருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாக மாறியிருக்கும். இந்தியா அறிவியலில் வல்லரசாக வேண்டும் என அப்துல்கலாம் கனவு கண்டார். அதற்கு இந்தியாவின் அறிவுத்தளம் வளர வேண்டும். அதற்கு அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கோவை முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானி ச.மோகன், அப்துல்கலாமின் கல்லூரித் தோழர் சம்பத்குமார், பாசறைப் புரவலர் ஆனந்த் பழனிசாமி, முன்னாள் சட்டக்கல்லூரி முதல்வர் சூரியநாராயணன், மூத்த தமிழறிஞர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாசறை துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment