ஜாக்டோ போராட்டத்தின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் 3 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினையும் திரட்டி மறியல் களத்தில் இறக்கிட வேண்டும்.27.01.2016 முதல் 29.01.2016 முடிய நடைபெறவுள்ள ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் ஆசிரியர்கள் மத்தியில் உணர்வு தீயினை உருவாக்க வேண்டும்.
ஜனவரி 30,31 சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மறியல் போராட்டமென்பது நமக்கு நாமே எந்த அலுவலகத்தை மறிக்கப் போகிறோம் என்ற நகைச்சுவை உணர்வே மேலிடுகிறது. எப்படியோ ஜாக்டோ மாநில அமைப்பு முடிவு செய்துவிட்டது.திரும்பிப் பார்ப்பது போராட்ட வடிவத்தில் இலக்கணமாக இருக்காது.
தேர்தல் சமயத்தில் எந்த அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை பகைத்துக்கொள்ள விரும்பாது. ஜாக்டோ போராட்டம் , ஜாக்டோ ஜியோ போராட்டம் , டெஸ்மா போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்திய போர்க்குண வரலாறு உடையது. இந்த மறியல் போராட்டத்தை பழைய போராட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அமைப்பிற்கு இந்த 3 நாள்கள் போராட்டத்தை போராட்டமாகவே கருத முடியாது.இந்த போராட்டத்தில் தேசியப் பணியே இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு கோரிக்கைகளுக்காக களம் காணுவதுதான் போர்க்குண உணர்வாகும். இருக்கிற ஆசிரியர்கள் எண்ணிக்கையில் முதல் இரண்டு நாள் சனி ஞாயிறில் பெருந்திரளாக கலந்துகொள்ளுங்கள்.காலையில் கைது மாலையில் விடுதலை சடங்காகவே முடியும்.
பிப்ரவரி 01 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம்தான் உண்மையான மறியல் போராட்டமாகும்.முதல் 2 நாள்கள் போராட்டத்தில் கைதாகி விடுதலையானவர்களும் , போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் காத்திருப்போரும் பிப்ரவரி 01 மறியல் போராட்டத்தில் பள்ளியில் எவரும் இல்லை அனைவரும் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள் என்ற நிலையை தமிழக அரசுக்கு உணர்த்துவோம். அரசு ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டத்தின் எண்ணிக்கை ஜேக்டோ அமைப்பின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்தாலும் அவர்களின் பீரிட்ட எழுச்சியின் உணர்வுதான் தமிழக முதலமைச்சருக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ள தலைமைச் செயலாளரையே அழைத்துப்பேச செய்தது என்ற யதார்த்த நிலையை உணர வேண்டும்.
எனவே ஜாக்டோ மறியல் போராட்டத்தில் முழு சக்தியினையும் அரசுக்கு உணர்த்தினால்தான் 7-வது ஊதியக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை நெஞ்சத்தில் பதிவு செய்து போர்க்குண வரலாறு படைத்த ஜாக்டோ பெரும்படையே கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்கிற முழு நம்பிகையுடன் விளைவினை ஜாக்டோ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு மறியல் களத்தில் வீறுநடை போட வாருங்கள் என அன்புடன் அழைகிறேன்.பாரதி கண்ட வீரம் செறிந்த பெண் ஆசிரிய சகோதரிகளே 3நாள் மறியல் போராட்டத்திலும் ’இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று தலைமை வகுத்து முன்னணியில் செல்லுங்கள்.
ஜேக்டோ அமைப்பு என்றும் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு இரும்பு கவசமாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இமைகளாக இருந்து கண்ணின் கருவிழியாம் உங்களை பாதுகாப்போம். கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரட்டும் தொடரட்டும். வெற்றி நமதே.
No comments:
Post a Comment