காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன. காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.
இதன் ஒரு கட்டமாக, குடும்ப பிரச்னைகள் உள்ள பட்டதாரிகள், காதல் திருமணம் செய்தவர்கள், விவாகரத்து செய்த பட்டதாரிகள், கலப்பு திருமணம் செய்தவர்ககளுக்கு, ஆசிரியர் வேலை வழங்கவேண்டாம் என, முடிவெடுத்து உள்ளன. பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், இந்த முடிவை எடுத்துள்ளதால், காதல் திருமணம் செய்த பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனத்தின், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கம் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு துவங்கி உள்ளது. அதில், வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், துணையை பிரிந்து வாழ்பவராகவோ, காதல் திருமணம் செய்தவராகவோ, குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதவராகவோ இருக்கக் கூடாது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணி நீக்கம்:
சென்னை, ராயபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர், அங்கே பணியாற்றிய ஆசிரியையை காதல் திருமணம் செய்தார். அதனால், அவருக்கு, ஆறு மாதமாக சம்பளம் வழங்க மறுத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நீக்கினர். இதை எதிர்த்து நடந்த போராட்டத்துக்கு பின், மீண்டும் அவர் பணியில் சேர்க்கப்பட்டார்.
No comments:
Post a Comment