'புதிய கல்வி திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.31.27 கோடியை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) ஒதுக்கியுள்ளது' என, காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது.காந்தி கிராம பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. டில்லி கட்டடக்கலை குழும தலைவர் உதய்சந்திரகாந்த் கட்காரி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். பல்கலை வேந்தர் ரெனானா ஜாப்வாலா தலைமை வகித்து பேசுகையில், “கல்வியை பாடங்களாக படித்தீர்கள். பட்டம் பெற்றபின் நீங்கள், அமைதி வழியில் சமூகத்தை மேம்படுத்த உறுதி கொள்ள வேண்டும்” என்றார்.
துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது: நடப்பாண்டில் பல்கலையில் ரூ.15.77 கோடியில் 90 ஆய்வு திட்டங்கள் நடக்கின்றன. ரூ.6.33 கோடி புதிய கல்வி திட்டங்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.45.28 கோடி மதிப்புள்ள 89 திட்டங்களுக்கான வரைவு அறிக்கை பல்வேறு திட்ட குழுமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் ஆராய்ச்சி மாணவர்கள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. உலகளவில் சிறந்த 29 உயர்கல்வி நிறுவனங்களின் கருத்து பரிமாற்ற கூட்டமைப்பில் (ஜியான்) காந்திகிராம பல்கலையும் இணைந்துள்ளது. அதற்கான விரிவாக்க பணிகளுக்காக '21ம் நுாற்றாண்டின் இந்திய அமெரிக்க அறிவு துவக்கம்' எனும் திட்டத்திற்கு யு.ஜி.சி., ரூ.1.25 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் உலகளவில் உயர்கல்வி குறித்த கருத்து பரிமாற்றங்கள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளது.
ரூ.31.27 கோடி: பல்கலைக்கழக மானியக் குழு நடப்பு நிதியாண்டில் பல்வேறு கல்வி திட்டங்களுக்கு ரூ.31.27 கோடி ஒதுக்கியுள்ளது. அதில், ரூ.3.80 கோடியை சிறுபான்மையினர் மாணவர்களுக்கான பயிற்சிக்கும், ரூ.80 ஆயிரம் விளையாட்டு உபகரணங்களுக்காகவும் பெறப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment