ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது:மத்திய அரசு நாடு முழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வருகிறோம். 2006--11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும் கண்டுகொள்ளவில்லை.
கடந்த 2011 தேர்தலின் போது ஜெயலலிதா,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டும் முடியப்போகிறது,இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்து விட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை இன்றுவரை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வறுமை யில் வாடுகிறது. இரண்டு லட்சம்
ஆசிரியர்களிடமிருந்து சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படுகிறது.
பிடித்தம் செய்த பணம் குறித்து கல்வித்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்கும் போது தெரியவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிப்பார் என தளராமல் நம்பிக்கையோடு இன்றுவரை காத்திருக்கிறோம்.
மகப்பேறு விடுப்பின்போது செல்லும் ஆசிரியைகளுக்கு, பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், துவக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைக்கென தனியான இயக்குனரகங்களை அரசு ஏற்படுத்திட வேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வினை கைவிடவேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை வரவேற்கிறோம்,அதே வேளையில் உதவிபொருட்களை ஆசிரியர்களே எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தபால்துறை மூலமாக பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வினியோகம் செய்துவந்தனர். அதே போன்று இனிவரும் காலங்களிலும் தபால் துறை மூலமாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.
No comments:
Post a Comment