'தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்ட வணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி நேற்று வெளியிட்டார். இந்த அட்டவணைப்படி இந்த ஆண்டில், மொத்தம், 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, 35 தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், 23 தேர்வுகள் மூலம், 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஒன்பது தேர்வுகள், 2015 தேர்வு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட்டு, மழை, வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் நடக்கவில்லை. இந்த தேர்வுகள் மூலம் இந்த ஆண்டு, 4,531 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள, குரூப் - 2 நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகள், குரூப் - 2 நேர்முகத் தேர்வு அல்லாத பதவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்களுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் அரசிடம் இருந்து வந்ததும் அறிவிக்கப்படும்.
அதிக காலிப் பணியிடங்கள்
கடந்த, 2015 தேர்வு திட்ட அட்டவணையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் மூலம், 6,652 இடங்கள்; புதிய ஆண்டில், 2,401 இடங்கள் என, 9,000 இடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, அதை விட கூடுதலாக, மொத்தம், 10 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் மாற்றம் வருமா?
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி அளித்த பேட்டி:
* உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி அரசு விதிகளின்படி, தேர்வுகள் மற்றும் அதற்கான முடிவு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* குரூப் 4 தேர்வில், 4,931; குரூப் 1ல், 45; உதவி ஜெயிலர், 65; வட்டார சுகாதார புள்ளியியலாளர், 177 இடங்கள் நிரப்பப்படும்
* இந்த ஆண்டு முதல், சுற்றுலா துறை அதிகாரி பணியிடத்துக்கு, ஐந்து; 'எல்காட்' துணை மேலாளர் பதவிக்கு, 12 இடங்களுக்கு, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வு நடத்தப்பட உள்ளது
* மூன்று மாதங்களில், 12 வகை பதவிகளுக்கு தேர்வு நடத்தி, 6,054 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
* தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர, புதிய திட்டம் தயாரிக்கப்படுகிறது. தேர்வர்கள், கவுன்சிலிங்குக்கு சென்னை வரும்போது ஏற்படும் சிரமத்தை போக்க புதிய வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment