பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பதில், புதியவர்கள் நியமிக்கப்படாததால், எட்டு பல்கலைகளில், துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 22 பல்கலைகள் உள்ளன. இவற்றில் வேளாண், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் உடற்கல்வி பல்கலைகளும் அடங்கும். திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளியும் பல்கலை அந்தஸ்தில் உள்ளது.
இந்த ஏழு பல்கலைகள் தவிர, மற்ற, 15 பல்கலைகள் கலை, அறிவியல், தொழில்நுட்ப படிப்புகளை வழங்கக் கூடியவை. இவற்றின் கீழ், 2,000 கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றின் துணைவேந்தர்கள், மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை நியமனம் செய்யப்படுகின்றனர்.
காலி;தற்போது, 15 பல்கலைகளில், எட்டு பல்கலைகளில் துணைவேந்தர் பணி ஓய்வு பெற்றுள்ளதால், அந்த இடங்கள் காலியாகியுள்ளன. புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தேடல் குழு அமைக்கப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், இன்னும் துணைவேந்தர்களை, அரசு இறுதி செய்யாததால், நிர்வாக பணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கு, 2015 ஏப்ரலில் தேடல் குழு அமைக்கப்பட்டது. 10 மாதங்கள் கடந்தும், இன்னும் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையிலும், துணைவேந்தர் இடங்கள்
காலியாக உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:
துணைவேந்தர் இல்லாமல், பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை. மாணவர்கள் பட்டம் பெறாமல், உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பு பெறவும்
முடியாமல் தவிக்கின்றனர்.
பேராசிரியர் காலியிடம் நிரப்புதல்; ஆராய்ச்சி படிப்புகளுக்கு அனுமதி பெறுதல்; புதிய பாடப்பிரிவுகள் துவங்குதல் என, ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மறியல்;துணைவேந்தர் காலியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம், மதுரை, மனோன்மணி சுந்தரனார் பல்கலை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுக் குழுவான, 'ஜாக்' அமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மறியல் நடத்த உள்ளனர்
1 comment:
God pls help us. I am also affected without Vice chancellor in TNTEU
Post a Comment