Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 23, 2016

    ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..!

    திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துறையூரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நன்றாக படித்தார்.
    பெற்றோரும், 'மகள் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறிவிடுவாள்' என நம்பிக்கையோடு ஊக்கம் அளித்தனர். தேர்வு நாளும் வந்தது. அனைத்துப் பாடங்களையும் நன்றாக எழுதிய திருப்தியில் இருந்தார் சாந்தினி. தேர்வு முடிவைப்  பார்த்தபோது அதிர்ந்தே போனார். 'சாந்தினி ஃபெயில்' எனக் காட்டியது ரிசல்ட். கதறியழுதவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

    'நன்றாகப் படிக்கும் மாணவி ஃபெயிலாக வாய்ப்பில்லையே' என ஆசிரியர்களும் அதிர்ந்து போனார்கள். மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது கூடுதல் அதிர்ச்சி. மாணவி எடுத்த மதிப்பெண்கள் பின்வருமாறு: தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100 எனக் காட்டியது. 'எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் இருக்கும்போது அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை' என சமாதானம் செய்த ஆசிரியர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர்.

    இங்குதான் சர்ச்சை ஆரம்பமானது. மறுகூட்டல் விண்ணப்பத்தை பார்த்த அதிகாரிகளுக்கு குளறுபடி நடந்திருப்பது புரியவந்தது. மாணவியின் ஒரிஜினல் விடைத்தாளில் என்ன கண்டார்களோ தெரியவில்லை. அடுத்த நாளே, மாணவி படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வரச் செய்தனர்.

    அங்கு நடந்ததை விவரித்தார் மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்.

     "டி.பி.ஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகத்துக்குள்ள சாந்தினியையும் அவரது அப்பா, அம்மாவையும் கூட்டிக்கிட்டு போனாங்க. சாந்தினி பெற்றோரை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு அதிகாரியோட அறைக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க. அங்க அந்த அதிகாரி, 'இங்க பாரு. மறுகூட்டலுக்கு எல்லாம் விண்ணப்பிக்க வேண்டாம். மறு தேர்வை எழுது. அறிவியல் பேப்பர்ல 2 மார்க் வர்றதுக்குக் காரணம். அப்ப மனநிலை சரியில்லாம இருந்தேன். மாத்திரை சாப்பிட்டதால, மாத்தி எழுதிட்டேன்னு லெட்டர் எழுதிக் கொடு'ன்னு எழுதி வாங்கிட்டார். சாந்தினியும் அழுதுட்டே வெளிய வந்துச்சு. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி அனுப்பிட்டாங்க" என்றார் வேதனையோடு.

    இதையடுத்து மறுதேர்வுக்கு விண்ணப்பித்தார் மாணவி சாந்தினி. அந்தத் தேர்வில் சாந்தினி எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா? 93 மதிப்பெண்கள்! இப்போது மொத்த மதிப்பெண் 434. தற்போது பிளஸ் 1 அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார். மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை அறிய ஆர்.டி.ஐ மூலம் மனு செய்தார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.

    அதைப் பற்றி நம்மிடம் விவரித்த சிவ இளங்கோ, "கடந்த ஆண்டு 14.9.15 அன்று ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளைக் கேட்டு மனு அனுப்பினோம். எந்தப் பதிலும் இல்லை. மேல்முறையீட்டில், தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், ' விடைத்தாளைக் கொடுக்கத் தேவையில்லை' என பதில் அனுப்பினார். இதனால் அதிர்ந்து போன நாங்கள், அவருக்கு ஒரு பதில் அனுப்பினோம். 'ஆர்.டி.ஐ சட்டத்தின்படி விடைத்தாளைக் கொடுக்க இடமுள்ளது. தேவைப்பட்டால் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் ஆர்.டி.ஐ குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். வந்து கலந்து கொள்ளுங்கள்' என கடிதம் அனுப்பினோம். அதன்பிறகே எங்களுக்கு மாணவி எழுதிய அனைத்து விடைத்தாள்களும் கிடைத்தன.

    மாணவி 2 மதிப்பெண் எடுத்ததாகச் சொல்லப்படும் விடைத்தாளில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை. எங்களுக்குக் கொடுப்பதற்காக யாரையோ வைத்து எழுதியுள்ளனர். அந்தத் தாளில், 'மலேரியா எப்படிப் பரவுகிறது?' என்ற கேள்விக்கு, 'எங்கள் பகுதியில் மலேரியா பாதிப்பு கிடையாது. எப்படிப் பரவுகிறது என உங்களுக்குத் தெரிந்திருக்குமே? பத்தாம் வகுப்பு மாணவியிடம் கேட்கலாமா? மலேரியாவைக் கட்டுப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இதை என்னிடம் கேட்க உங்களுக்கு அறிவே இல்லையா? இத்துடன் எனது விண்ணப்பத்தை முடித்துக் கொள்கிறேன்' என ஒரு பதில் எழுதப்பட்டுள்ளது.

    அடுத்து, மழைநீர் சேமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு, 'மழைநீரை சேமிக்கத் தெரியாத கழுதைகள்தானே நாம். மரம் இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. சீக்கிரம் சாகப் போகிறேன். இதைப் படிக்கும் நீங்களும் சாகத்தான் போகிறீர்கள்' என பதில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி, அறிவியல் பாடத்தில் இப்படியொரு பதிலை எழுதுவாரா? அதுவும் மறுதேர்வில் 93 மதிப்பெண்ணை அந்த மாணவி எடுத்திருக்கிறார்.

    ஆசிரியர்கள் செய்த பெருந்தவறால் அந்த மாணவிக்கு மென்டல் பட்டம் கட்டிவிட்டார்கள் அதிகாரிகள். மாணவி பிளஸ் 2 முடித்துவிட்டு எங்கு சென்றாலும், பத்தாம் வகுப்பில் ஃபெயில் என்றுதானே இருக்கும்? இந்தத் தவறுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைக்கு மாவட்டக் கல்வி அதிகாரியாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வோம்!" என்றார் அதிர்ச்சி விலகாமல்.

    No comments: