ஆசிரியர்கள், பெற்றோர் நிலையிலிருந்து பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று ஆட்சியர் ச.ஜெயந்தி பேசினார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர், குமார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து ஆட்சியர் ச.ஜெயந்தி பேசியது:
பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திட வேண்டும். மாணவ, மாணவியரை உளவியல் ரீதியாகக் கண்காணித்து, அவர்களது பிரச்னைகளை கண்டறிய வேண்டும். பள்ளிக் குழந்தைகள், பேருந்தில் ஏறுவதிலிருந்து வீடு சேர்வது வரை பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பில்தான் உள்ளனர். பெற்றோர், பள்ளி நிர்வாகங்களை நம்பித்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
குழந்தைகளுக்கு மன ரீதியாக பிரச்னைகள் இருப்பின், அது குறித்து பெற்றோருக்குத் தெரிவித்து, உளவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியருக்குப் பள்ளியிலும், அவர்களின் குடியிருப்புப் பகுதியிலும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் உள்ளதா என்பதை நட்பு ரீதியில் கலந்துரையாடி, பிரச்னைகளை கண்டறிந்து பெற்றோர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஆசிரியர்கள், பெற்றோர் நிலையிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், பள்ளிக்கு அருகில் திறந்தவெளிக் கிணறுகள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாவட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளி மாணவர்கள் தொடர்பான எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், குழந்தைகளின் பிரச்னைகளை உளவியல் ரீதியாகக் கண்டறிதல், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார், உளவியல் ஆலோசகர் அருள்வடிவு, மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment