தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 1.1.2016ன் அடிப்படையில் தலைமையாசிரியர் பதவிக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதன்படி 2001- 2002 கல்வியாண்டில் நேரடியாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறைகளில் இருந்து கல்வித்துறைக்கு மாற்றலானவர், தொடக்க கல்வியில் இருந்து பள்ளி கல்விக்கு மாற்றமானவர் என்ற பிரிவில் உள்ள ஆசிரியர்களை பணி மூப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் 2002-2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேரை இப்பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை. 2002 டிசம்பரில் பணி நியமனம் பெற்றவர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன் கூறியதாவது:
தலைமையாசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலில் 2002 ஜூலையில் நியமனம் பெற்றவர்களை விடுவித்து, அதன் பின் டிசம்பரில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பட்டியலில் எவ்வாறு சேர்க்கலாம். காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்களையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கையாக மீண்டும் அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment