ஹரியானாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், 'அரசுத் துறைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், கடன் மற்றும் கட்டண பாக்கிகள் வைத்திருக்காதவர்கள் மட்டுமே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், கூட்டுறவு வங்கிகளில், கடன் பாக்கி வைத்திருந்தவர்கள், 153 கோடி ரூபாய் அளவுக்கு, திரும்பச் செலுத்தி உள்ளனர். அதேபோன்ற, விதிமுறைகள் தமிழகத்திலும் அமலாக வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது.
இந்த அரசு, 2015ல், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சட்டசபையில் நிறைவேற்றியது. அதன்படி, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர், அரசு மற்றும் வங்கிகளில் எந்த பாக்கியும் வைத்திருக்கக் கூடாது. சொத்து வரி, மின்கட்டணம் போன்றவற்றை செலுத்தியிருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனையும் அடைத்திருக்க வேண்டும்.
அத்துடன், ஒவ்வொரு வேட்பாளரின் வீட்டிலும், கட்டாயம் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோர், குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேநேரத்தில், பெண்கள் மற்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் வேட்பாளராக போட்டியிடலாம்என, விதி விலக்கும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அதிரடி விதிமுறைகளை எதிர்த்து, ஹரியானா ஐகோர்ட்டில், பலர் மனு தாக்கல் செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், 2015, செப்., 19ல் துவங்கவிருந்த, ஹரியானா பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 'ஹரியானா அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தம் செல்லும்' என, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் நோக்கில், லட்சத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள், அரசுத் துறைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை, அவசர அவசரமாக செலுத்தினர்.
இந்த வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும், 153 கோடி ரூபாய் கடன் வசூலாகியுள்ளது. அத்துடன், அரசு துறைகளுக்குசெலுத்த வேண்டிய நிலுவையும், குறிப்பிடத்தக்க அளவிற்கு பைசல் செய்யப்பட்டுள்ளதாக, ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. அதனால், இதுபோன்ற சட்ட திருத்தம், தமிழகத்திலும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3 கட்ட தேர்தல்: 1ஹரியானாவில், பஞ்சாயத்து தேர்தல், ஜன., 10, 17, 24ம் தேதிகளில், மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இன்று, முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
2இங்கு, 6,198 கிராமங்கள், 21 ஜில்லா பரிஷத்கள், 147 பஞ்சாயத் சமிதிகளில், தேர்தல் நடக்கிறது
3இத்தேர்தலில், 1.10 கோடி பேர் ஓட்டளிக்கும் உரிமை பெற்றுள்ளனர்
4தேர்தலையொட்டி, 21,475 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
5இத்தேர்தல் மூலம், 72 ஆயிரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வசூல் நிலவரம்
* ஹரியானா மாநில கூட்டுறவு வங்கியின் கீழ் உள்ள, வேளாண் கூட்டுறவு சங்கங்கள் - ரூ.118.70 கோடி
* மாவட்ட கூட்டுறவு வங்கி - ரூ.11.37 கோடி
* ஹரியானா மாநில கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி - ரூ.23.21 கோடி
* 2015, டிச., 20 முதல் இந்தாண்டு, 7ம் தேதி வரை, கூட்டுறவு வங்கிகளில், 23.21 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
பிக்ரம் சிங் யாதவ் ஹரியானா கூட்டுறவு துறை அமைச்சர்.
No comments:
Post a Comment