நுாறு சதவீதம் முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், கீழ்மட்ட ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், வாக்காளர் பட்டியல் குளறுபடி தவிர்க்க இயலாததாகிறது. இம்முறை பல இடங்களில் நேரடி கள ஆய்வு நடைபெறாத நிலையில், இறுதி வாக்காளர் பட்டி யல் தவறில்லாமல் வெளியாகுமா? என்ற சந்தேகம் வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அக்., 24ம் தேதி நிறைவடைந்தது. இதற்காக, மூன்று சிறப்பு முகாமங்கள் நடத்தப்பட்டன. மொத்தம், 22.81 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
எஸ்.எம்.எஸ்., மூலம்...வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஒரு தொகுதி யில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றம் செய்யக் கோரி, 16.94 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
பெயர் நீக்கம் செய்யக் கோரி, 1.76 லட்சம் பேர்; திருத்தம் செய்யக் கோரி, 2.69 லட்சம் பேர்; தொகுதிக்குள் பெயர் மாற்றக் கோரி, 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டன. அத்துடன் விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இவ்விவரம் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டது.
பின் பதிவேற்றம் செய்யப்பட்ட, விண்ணப்பதாரரின் பெயர், வேறு எங்கும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் பெயரில், 'செக் லிஸ்ட்' தயார் செய்யப்பட்டது.
இதில், விண்ணப்பதாரர் பெயர், முகவரி, அவரது பெயர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தால் அதன் விவரம், அவர் கொடுத்துள்ள இருப்பிட சான்று, வயது சான்று, ஆகிய விவரங்கள் இடம் பெற்றன.
அவை ஓட்டுச் சாவடி அலுவலரிடம் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டிற்கு சென்று, விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியா என, கள ஆய்வு மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டது.
அவர் வீட்டிற்கு வரும் தேதி, விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கள்ள ஓட்டுக்களை...மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் அறியலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்கள் நிலை என்ன என பார்த்தனர். அப்போது, 'டேட்டா என்ட்ரி ஓவர்' என்று மட்டும் காண்பித்தது. அதன்பின் வேறு தகவல் இல்லை.
கள ஆய்வுக்கு, ஓட்டுச் சாவடி அலுவலர் வருவது தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., எதுவும் வரவில்லை. பெரும்பாலான இடங்களில், கள ஆய்வுக்கு ஊழியர்கள் யாரும் செல்லவில்லை.
இச்சூழ்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, வாக்களார் இறுதி பட்டியல் தயாராகி விட்டதாக, தேர்தல் கமிஷனர் அறிவித்து விட்டார். வரும் 20ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.இப்பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க கோரி விண்ணப்பித்த, 16.94 லட்சம் பேரில், எத்தனை பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது; எத்தனை பேர் பெயர் விடுபட்டுள்ளது என்பது பட்டியல் வெளியான பின்னரே தெரியும்.அதேபோல் முகவரி மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்கள் நிலையும், அப்போது தான் தெரியும். கள ஆய்வு முறையாக நடைபெறாததால், இறுதி வாக்காளர் பட்டியல் தவறில்லாமல் இருக்குமா? என்ற சந்தேகம் வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தவறில்லாமல் இருந்தால் மட்டுமே, தேர்தலில் கள்ள ஓட்டுக்களை தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment