பள்ளி கேன்டீன்களில், 'ஜிலேபி, சிப்ஸ்' போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், கேன்டீன் உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர் உடல்நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி கேன்டீன்களில், மாணவர் உடல்நலனுக்கு தீங்கான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதும், வீடுகளிலும் அதே போன்ற பொருட்களை, பெற்றோர் வாங்கித் தருவதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும், உணவுப் பொருள் குறித்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விவரம்:
தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்சிப்ஸ், உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற வறுத்த தின்பண்டங்கள், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், கலாகந்த், நுாடுல்ஸ், பிட்சா, பர்கர், டிக்கா அனைத்து வகை சூயிங்கம் மற்றும் 'கேன்டீஸ்' எனப்படும் இனிப்பு மிட்டாய்கள்.
சர்க்கரை, 30 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்படும் ஜிலேபி, பூந்தி, இமார்தி, சாக்லேட் மற்றும் கருப்பு சாக்லேட், 'பேக்' செய்யப்பட்ட அனைத்து வகை மிட்டாய், குளிர்பானங்கள், கேக், பிஸ்கட், பன், பதப்படுத்திய ஜாம் மற்றும் ஜெல்லி வகைகளை பயன்படுத்தக் கூடாது.
பரிந்துரைக்கப்பட்டவை: காய்கறி சேர்த்த கோதுமை பரோட்டா, ரொட்டி, அரிசி சாதம், புலாவ், பருப்பு வகை, கோதுமை அல்வா, கறுப்பு பட்டாணி கடலை, கோதுமை உப்புமா, காய்கறி வகை கிச்சடி, பருப்பு சாதம், சாம்பார், இட்லி, வடை, கீர், பிர்னி, பாயசம் மற்றும் பால் வகை பானங்கள், காய்கறி உப்புமா, காய்கறி, 'சாண்ட்விச்' புளி சாதம் மற்றும் கூட்டு வகைகள்.
பக்கோடா, சமோசா, வடை போன்ற சத்தான வகையில் சுத்தமாக தயாரித்து, வாரம், ஒருநாள் மட்டும் பள்ளி கேன்டீனில் வழங்கலாம். மீன், கொழுப்பு குறைந்த இறைச்சி, முட்டை, தானிய உணவு வகைகள்; மேலும் சுத்தமான பழ ரசம் மாணவர்களுக்கு தரலாம். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
எப்படி தயாரிக்க வேண்டும்: மாணவர்களுக்கான உணவை, கொழுப்பற்ற சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில், அவ்வப்போது மாற்றி மாற்றி சமைக்க வேண்டும். ஒரே எண்ணெயில் சமைக்கக் கூடாது. நெய் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது மாணவர் உடல்நலனுக்கு நல்லது.
உடற்பயிற்சி அவசியம்:மாணவர்களை, முடிந்தவரை அவ்வப்போது நடக்க வைக்க வேண்டும். நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளில் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். மாணவர்கள் சைக்கிள் ஓட்டவும், பள்ளிக்கு சைக்கிளில் வருவதற்கான பயிற்சி தரலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment