நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில், யோகா சார்ந்த கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளையும், நிகழ்ச்சிகளையும் நிறுவுவது தொடர்பாக, பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹெச்.ஆர்.நாகேந்திரா தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலைக்கழகங்களில் யோகக் கலை-அறிவியல் துறையை நிறுவுவது, யோகக் கல்விக் குழுக்களை அமைப்பது ஆகியவை தொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கூட்டம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களில் யோகக் கல்வியை கற்பிப்பதற்கான பாடத்திட்டங்களை வரையறுப்பது, சான்றிதழ், பட்டயம், இளங்கலை, முதுகலை, ஆய்வு என பல்வேறு நிலைகளில் யோகா தொடர்பான பாடங்களைக் கற்பிப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வது ஆகியவற்றை பரிந்துரைப்பதற்காக, பேராசிரியர் நாகேந்திரா தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில், கொல்கத்தா ராமகிருஷ்ண விவேகானந்த பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமி ஆத்மபிரியானந்தா, மதுரை திருவேடகம் கல்லூரியின் ஆலோசகர் பேராசிரியர் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும், மத்திய ஆயுஷ் துறையின் இணைச் செயலர், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ஆகியோரும் இடம்பெறுகின்றனர். இந்தக் குழு, 45 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
யோகக்கலை-அறிவியல் துறைகள் நிறுவப்படும் பல்கலைக்கழகங்களின் உதவியோடு தேசிய அளவில் நிறுவப்படவுள்ள யோகா மையங்களுக்கான பெயர்களையும் இந்தக் குழுவினர் பரிந்துரைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment