எத்தனை கனவுகள்! ஆசைகள்! பிஞ்சு கரம்பிடித்து பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்த்த முதல் நாளிலேயே பெற்றோர்கள் கனவு கோட்டை கட்டி விடுகிறார்கள்.அந்த கோட்டையில் ராஜாவாக, ராணியாக, மந்திரியாக, உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரியாக... இன்னும் இப்படி பலபல தோற்றங்களில் அந்த பிள்ளைகள் வலம் வருவது போல் கனவு காண்கிறார்கள்.தங்கள் சுகங்களையும், வேதனைகளையும் தியாகம் செய்து பிள்ளைகளின் சந்தோஷத்தை மட்டுமே தங்கள் சந்தோஷமாக தாங்கி வாழ்கிறார்கள்.
படிப்பின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் தாண்டும் போது மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வாசலில் கால் வைத்ததும் அந்த மாணவனும் பல கனவுகள் காண்கிறான்.காரணம், அங்குதான் அவனது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அந்த டீன் ஏஜ் பருவம் என்பது ‘பஞ்சு’ மாதிரி. எங்கெல்லாம் காற்று வீசுகிறதோ அங்கெல்லாம் பஞ்சு பறந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த பருவத்தில் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் தற்காலத்து கல்லூரி சூழ்நிலைகள் கவலை அளிப்பதாக உள்ளன. தாதாக்களை போல் நடுரோட்டில் மோதி கொள்வது... அரிவாள் கத்தியுடன் கல்லூரிக்கு வருவதெல்லாம் அதிகரித்து வருகிறது.இதுக படிக்கவா போவுது...? என்று பார்ப்பவர்கள் வெறுக்கும் அளவுக்கு மாணவர்களின் செயல்பாடு இருப்பது வேதனையானது.வாழ்க்கையில் சாதிக்கும் மாணவர்களை விட வாழ்க்கையை தொலைக்கும் மாணவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அதற்கு காரணம் கல்லூரி களம் கல்விக்களமாக மட்டும் இல்லை என்ற குறைபாட்டை ஏற்றே ஆக வேண்டும். அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும் அத்தனை போராட்டங்களையும் மாணவர்களும் கையில் எடுக்கிறார்கள். போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் கட்சிகளுக்கு ஆதரவு தேவை என்பதால் போராட்ட களத்தில் குதிக்கும் மாணவர்களை உசுப்பேற்றி விடுகிறார்கள்.மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்று அவர்களுக்கு கொம்பு சீவிவிட்டு அவர்களுக்கு ஆதரவான தளங்களை கல்லூரி வளாகங்களிலேயே அமைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கும். அதில் ஊறிப்போகும் மாணவர்கள் படிப்பை உதறிவிட்டு அந்த சித்தாந்தங்களை பரப்புவதில்தான் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் என்ற மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு பல திரைமறைவு நிகழ்வுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ‘தலித்’ மாணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. நம்மை பொறுத்தவரை மாணவர்கள் என்றால் மாணவர்கள் அவ்வளவுதான். அவர்களுக்குள் சாதி, மத, இன பேதம் தேவையற்றது. அனைவரும் மாணவர் இனம் என்ற ஒரே பட்டியலில் இருப்பவர்கள். அப்படித்தான் பழகுகிறார்கள்.ஆனால் உருவாகும் பல அமைப்புகள் தான் அவர்களுக்குள் பிரிவினையையும் உருவாக்குகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை.மாணவரின் சாவுக்கு மந்திரி உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது விசாரணை வளையத்துக்குள் இருப்பதால் கண்டிப்பாக உண்மை வெளிவர வேண்டும்.அதே நேரத்தில் அந்த மாணவரின் மரண சாசனம் பல கேள்விகளை எழ வைக்கிறது. தலித் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே கொஞ்சம் விஷத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று குமுறிவிட்டு எனது மரணத்துக்கு நானே காரணம் என்று சோகம் நிறைந்த தனது வாழ்க்கையை கண்ணீரோடு குறிப்பிட்டு இருக்கிறார்.இன்னொரு கடிதத்தில் அவரும் அவரது நண்பர்களும் இணைந்திருந்த அமைப்பில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியேற இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு படிப்பைவிட அமைப்பின் மீது கொண்ட ஈடுபாடு அதிகமாக இருந்துள்ளது. அறிவியலை நேசித்த ஒரு மாணவனின் வாழ்க்கை இப்படி பாதியிலேயே முடிந்து போய்விட்டது! வருங்கால விஞ்ஞானியை நாடு இழந்து இருக்கிறது!இப்போது அவரது மரணமும் அரசியலாகி இருக்கிறது. தலித் மாணவர்களை குறிவைத்து பழிவாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். பிரிவினை உணர்வை வளர்க்கிறார்கள் என்று பாரதிய ஜனதா சொல்கிறது. ஆக, மாணவர்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நன்றாக பயன்படுத்தி வருகின்றன என்பது மட்டும் தெளிவாகி விட்டது. படிப்பை தவிர வேறு எந்த செயலிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சியும் சொல்வதில்லை. படிக்கும் காலத்தில் அமைப்புகளில் தீவிரமாக இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி செல்வார்கள் என்பதற்கு கெஜ்ரிவால் மீது மை வீசிய பாவனா ஒரு சாட்சி. படிப்பு இருந்தால் சாதி தலை தூக்காது என்பதுதானே யதார்த்தம். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு மெத்த படித்தவர்கள் கலப்பு மணம் புரிந்து கூடி வாழ்வதும், நட்பு பாராட்டி கூடி வாழ்வதும் கண்கூடான விஷயங்கள். எனவே, படிப்புக்குத்தான் முக்கியத்துவம்
இளம் வயதைசேர்ந்த 60 லட்சம் தலித்துகள் படிப்பில்லாமல் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதைப்பற்றி கவலைப்படுவது யார்? படிக்கிற காலத்தில் படிப்பு என்பது மட்டுமே மாணவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டும்.
No comments:
Post a Comment