இணையதளம் மூலமாக கருவூல சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஒவ்வோர் ஆண்டும் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் நேர்காணலுக்கு வர வேண்டும். மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம், நிலுவைகள் போன்றவற்றை கருவூலங்கள் மூலமாகப் பெற்று வருகின்றனர்.
குடும்ப ஓய்வூதியதாரர்களும் தங்களது வாழ்வுக் கால நிலுவைத் தொகை, குடும்ப நலநிதி, ஓய்வூதிய நிலுவைகளை மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மூலமாகப் பெற்று வருகின்றனர். இதுதவிர ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவதும் கருவூலங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.
நேர்காணல் மூலமாக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் நிலுவைத் தொகை, இறந்த அரசு ஊழியர்களின் குடும்ப நலநிதி பெறுதல், ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களின் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு அரசு இணையதளம் மூலமாக ஏற்பாடுகளை செய்யவுள்ளது. அற்காக ஆதார் எண்கள் பெறப்பட்டு ஓய்வூதியர்களின் விவரங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் நேர்காணல், இதர ஓய்வூதியர் தொடர்பான பயன்களுக்கு சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு வருவதற்குப் பதிலாக இணையதளம் மூலமாக வசதிகளைப் பெறுவதற்கு தங்களது ஆதார் அட்டை எண் விவரங்கள் ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கொடுப்பாணை எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தங்களது ஆதார் எண்களை மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் வழங்காத மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களுக்கு விவரங்களை நேரிடையாகவோ, (கருவூல அலுவலர், மாவட்டக் கருவூலம், ஈரோடு) தபால் வழியாகவோ, ஓய்வூதியர் பெயர், ஓய்வூதியக் கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெறும் கருவூலம், சார்நிலை கருவூலம், ஆதார் அட்டை எண் ஆகிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்கள் பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்கள், ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகம், ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்கள் பெற்று ஈரோடு மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலத்தில் இருந்து வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment