ஊதியத் குழுவின் பரிந்துரைப்படி பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ரு.32,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சகத்திடம் ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தும்போது 2016-17-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கூடுதலாக சுமார் ரூ.28,450 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிக்கன நடவடிக்கைகள் மூலமும், பயணிகள், சரக்குக் கட்டணம் உள்ளிட்டவற்றை மிதமான அளவில் உயர்த்தி வருவதன் மூலமும் ரயில்வே துறையின் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு வருகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது, தரமான பொருள்கள் மூலம் பராமரிப்பு செலவைக் குறைப்பது, புதிய பணியாளர்களைத் தேர்வு செய்வதைக் குறைப்பது போன்ற முக்கிய சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே எடுத்துள்ளது.
எனினும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் பெருமளவில் செலவு ஏற்படும். எனவே அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு அந்த சுமையை ஈடுகட்டுவதற்காக ரூ.32,000 கோடியை ரயில்வே துறைக்கு நிதியமைச்சகம் அளித்து உதவ வேண்டும். இந்தக் காலகட்டத்தில் வருமானத்தைப் பெருக்குவது, செலவைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ரயில்வே தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்.
ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள சம்பள உயர்வில் 35.6 சதவீதத்தை ரயில்வே துறை மட்டுமே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்களில் 28 சதவீதம் பேர் ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று தனது கடிதத்தில் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது ரயில்வே துறையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பான முழுக் கணக்கு விவரத்தையும் அக்கடிதத்தில் அவர் இணைத்துள்ளார்.
No comments:
Post a Comment