போலிச் சான்றிதழ்கள் தயாரித்து ஆசிரியர் பணியைப் பெற்ற நபரும், அவருக்கு போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கியவரும் தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் வி. முனியப்பன் (37). பிளஸ் 2 மட்டுமே முடித்த இவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற பெயரில், ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட சான்றுகளுடன் நாமக்கல் குமாரபாளையத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்திருக்கிறார்.
பிறகு, வேலூர் மாவட்டம், எர்ரம்பட்டிக்கு பணி மாறுதலில் சென்ற இவர் மீது சந்தேகத்தின் பேரில் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சான்றிதழ்களைச் சரிபார்த்தனர். அப்போது அவரது சான்றிதழ்கள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில், தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், முனியப்பன் அளித்த ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று, குடும்ப அட்டை போன்ற அனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டிருப்பதும், இதற்கான உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ராஜேந்திரன் (42) என்பவர் தயாரித்து வழங்கியதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் மா. சிவலிங்கம், சனிக்கிழமை பாலக்கோடு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினார்.
துரைராஜ் இருக்கிறாரா?
இந்தச் சம்பவத்தில் முனியப்பன் தயாரித்த அனைத்துச் சான்றுகளும் துரைராஜ் என்பவர் பெயரிலேயே இருப்பதால், அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா? இல்லையா? அவர் நிலை என்ன? என்பது குறித்த தொடர் விசாரணையை குற்றப் பிரிவு போலீஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும், இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செந்தில்குமார் என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதால், இதுபோன்ற போலிச் சான்றிதழ் தயாரித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கக் கூடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இத்துடன், போலிச் சான்றிதழ்களைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன், ஏற்கெனவே 2001ஆம் ஆண்டில் இதேபோல போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவராக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு நீதிமன்றத்தால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டவர் என போலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment