மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.
இந்த தேர்வு, அடுத்த மாதம், 21ல் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள், சிசெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாக, மாநில அரசின் சார்பில் நடத்தப்படும், 'செட்' தேர்வு அறிவிப்பை, அன்னை தெரசா பல்கலை அறிவித்துள்ளது; இதற்கான தேர்வு நாளும், பிப்., 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால், மத்திய அரசின் பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா அல்லது, மாநில அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா? என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, 'நெட், செட்' சங்க ஆலோசகர் பேராசிரியர் சாமிநாதன் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு பின், செட் தேர்வு நடக்க உள்ளது. தற்போது அதை எழுதாவிட்டால், அடுத்த தேர்வுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதனால், பட்டதாரிகளின் வயது அதிகமாகி வேலையில் சேர முடியாது. எனவே, தமிழக அரசின் செட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பதிவாளரிடம் விசாரணை
செட் தகுதித் தேர்வு பொது அறிவிக்கையில், தேதியை தவறாகக் குறிப்பிட்டது குறித்து, அன்னை தெரசா பல்கலை பதிவாளர் கலாவிடம், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா, நேற்று விசாரணை நடத்தினார். 'அறிவிக்கையில் தவறு நடந்தது எப்படி; அறிவிக்கை பைலை கையாண்டவர்கள் யார்?' என, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செட் தேர்வுக்காக தனியே உருவாக்கப்பட்ட, http:/www.setexam2016.in/ இணையதளத்தில், சரியான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிப்., 21ல் செட் தேர்வு நடக்கவுள்ளது. ஜன., 20 முதல், பிப்., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
பொது பிரிவினருக்கு, 1,500 ரூபாய்; பிற்படுத்தப்பட்டோருக்கு, 1,250 ரூபாய்; பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் என, தேர்வு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment