போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் டி.ராமராஜ் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் 812 தொடக்கப் பள்ளிகள், 209 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,021 பள்ளிகள் உள்ளன. இதில் 1,05,705 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந் நிலையில் தமிழர்களின் வாழ்வினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஓர்
உன்னத பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி துவங்குகிறது. அப்பண்டிகை நாளின் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை. அன்றைய தினம் தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளைச் சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி, காப்பு கட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போகிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். மேலும், பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்வர். பெரும்பாலான ஆசிரியர்கள், நகர்ப்புறங்களில் இருந்து, தங்கள் சொந்த கிராமத்துக்கு சென்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியரும் சொந்த ஊருக்கு சென்று தங்கள் பெற்றேர் மற்றும் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
இந் நிலையில், ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் இந்த இரண்டு நாட்களும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் வேலைநாளாக செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை சார்பில் வழங்கியுள்ள நாட்காட்டியில் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொருட்டு அவரவர் மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது விடுமுறை இல்லாததால், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் பல மாணவ, மாணவியர் வெளி மாவட்டங்களில் உள்ள அவரவர் சொந்த ஊருக்கு பண்டிகை நேரத்தில் பயணம் மேற்கொள்வதில் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மாணவ, மாணவியர் பொங்கல் பண்டிகையினை மனமகிழ்வுடன் சிறப்புடன் கொண்டாடவும், விடுப்புநாள் இல்லாது பேருந்துகளில் செல்வதால் ஏற்படும் சிரமங்களினாலும் அத்தகைய சூழ்நிலையை தவிர்க்க ஜனவரி 14ஆம் தேதி நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, அதனை ஈடுசெய்யும் வகையில் வேறொரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கும் ஆவன செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment