மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள இளநிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இளைஞர்களுக்காக மத்திய அரசு வழங்கும் புத்தாண்டு பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இளநிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், குரூப் ‘சி, டி பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதால் ஊழல் அதிகரிக்கிறது.
அதிகாரவர்க்கத்தால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர், சில நேரங்களில் பணம் கொடுத்த பிறகும்கூட வேலை கிடைப்பதில்லை. என பல்வேறு தரப்பில் பல புகார்கள் எழுந்தன. இதை கடந்த சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.
நேர்முகத் தேர்வு என்ற பெயரில் சில நிமிடங்கள் மட்டும் ஒருவரிடம் பேசுவதைக் கொண்டு அவரது மனநிலையை அறிய முடியாது. நேர்முகத் தேர்வை ரத்து செய்வதன் மூலம் ஏழை இளைஞர்கள் பயன் அடைவார்கள். தரகர்களின் ஆதிக்கம் ஒழியும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசின் குரூப் பி, சி, டி பிரிவு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்வது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பணியாளர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ‘மத்திய அரசின் சி, டி மற்றும் கெஜட்டில் இடம்பெறாத பி பிரிவு, அதற்கு சமமான அனைத்து இளநிலை பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. எனினும் திறனறி தேர்வு, உடல்தகுதி தேர்வு ஆகியவை தொடர்ந்து நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment