'பி.எட்., கல்லுாரிகள் துவங்க, தடையில்லா சான்று கோரி, மூன்று கல்வி அறக்கட்டளைகள் அளித்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கு, கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி கவுன்சில்:வேலுார், மதுரை மற்றும் பிற நகரங்களில் இயங்கும் கல்வி அமைப்புகள் சார்பில், பி.எட்., கல்லுாரிகள் துவங்க அனுமதி கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.ஆனால், ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களிடம் இருந்து பெறப்பட்ட, தடையில்லா சான்று இணைக்கப்படவில்லை.
இதனால், விண்ணப்பங்களை நிராகரிப்பது தொடர்பாக, மூன்று கல்வி அறக்கட்டளைகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தென் மண்டல இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, மூன்று கல்வி அறக்கட்டளைகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு:
விதிமுறைகளில்...:தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைகளில், 'பி.எட்., கல்லுாரிகள் துவங்க விண்ணப்பத்துடன், தமிழக ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும்
தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி கவுன்சிலின் தடையில்லா சான்றை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் கல்வி அறக்கட்டளைகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் நோட்டீசுக்கு பதில் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளன; இந்த விஷயத்தில் தலையிட முடியாது; மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் நோட்டீசுக்கு பதிலளிக்க, மனுதாரர் கல்வி அறக்கட்டளைகளுக்கு, இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. தடையில்லா சான்று கோரி மனுதாரர்கள் அளித்த விண்ணப்பங்கள், 2015 ஜூன் முதல் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் கல்வி பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment