அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7இல் நடக்கவுள்ள ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தின் பிரசாரப் பயணமாக, செவ்வாய்க்கிழமை சிவகங்கை வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஊதிய முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வது தேவையற்றது. நாங்கள் அரசு வேலை மட்டுமே செய்கிறோம். எந்தக் கட்சிக்கும் சாத கமாகச் செயல்படவில்லை. தற்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தும் நேரடி உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அடுத்த நிலைகளில் உள்ள அலுவலர்களை இடமாற்றம் செய்வதால், புதிதாக வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடம், சூழ்நிலைகள் தெரியாது. எனவே, தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படுமே தவிர, நன்மை கிடைக்காது என்றார்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தமிழரசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment