அரசு பள்ளிகளுக்கு ஆய்வக உபகரணங்கள், புத்தகங்கள், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வாங்க, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மத்திய அரசின் நிதியில், பல கோடி ரூபாய், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பைக்கு போவதாக, ஊழல் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ், 12 ஆயிரத்து 282 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றின் பராமரிப்பு, கட்டமைப்பு, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி, இடைநிலை கல்வித் திட்டம் வாயிலாக, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், 12,282 பள்ளிகளுக்கு மானியமாக, 184.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; இதில்தான், முறைகேடுகள் நடந்துள்ளன.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, மானியமாக ஆண்டுதோறும் தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆய்வக பொருட்கள், புத்தகம், சிறு பராமரிப்பு செலவு, தொலைபேசி, இணையதள சேவைக்கு, இத்தொகை பயன்படுத்தப்படுகிறது. பொருட்கள் கொள்முதல் செய்யும்போது, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து, செயல்பட வேண்டும்; ஒளிவுமறைவு இல்லாமல், தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி பெற வேண்டும். குறைந்த விலை குறிப்பிடும் நிறுவனத்திடம், பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்பது விதிமுறை.
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே பொருட்களை கொள்முதல் செய்ய, தலைமையாசிரியர்கள் நிர்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்கையில், 7,000 ரூபாய் மதிப்புள்ள ஆய்வகப் பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் எனவும், 2,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், 7,500 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், கடந்த செப்டம்பரில் கல்வியாண்டு நிதியாக, 183 பள்ளிகளுக்கு, 91.5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இதில், அறிவியல் ஆய்வக உபகரணங்கள், 45.75 லட்சம் ரூபாய்க்கு, விருதுநகர் மற்றும் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் பொருட்களின் மதிப்பை, பல மடங்கு உயர்த்தி, சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தரமற்ற பர்னிச்சரும், இதே தனியார் நிறுவனத்திடம், முறைகேடாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதை மறைக்க, பல தலைமையாசிரியர்களுக்கு, கமிஷன் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட மாநில இணை இயக்குனர் குமாரிடம் கேட்டதற்கு, பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடத்திய பின்பே, நிதியை செலவிட முடியும். தலைமையாசிரியர்கள், அந்தந்த பகுதி தனியார் நிறுவனங்களிடம் விலைப்புள்ளி பெற்று, தகுதி அடிப்படையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களிடம்தான், கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை, என்றார். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரிடம்தான் கேட்க வேண்டும், என்றார்.
குப்பையாக மாறிய தரமற்ற பொருட்கள்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின், மாநில பொதுச்செயலாளர் சாமிசத்யமூர்த்தி கூறுகையில், ஐந்தாண்டுகளாக ஒரே மாதிரியான அறிவியல் ஆய்வக உபகரணங்களே வழங்கப்பட்டுள்ள தால், பள்ளிகளில் அவை பயன்பாடின்றி குப்பையாக தேங்கியுள்ளன. பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை, தலைமையாசிரியர்களே கொள்முதல் செய்துகொள்ள, அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.
முறைகேட்டுக்கு ரூ.1,000 கமிஷன்
பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட நிறுவனங்களிடம் பொருட்களை கொள்முதல் செய்ய, கடந்தாண்டு தலைமை ஆசிரியர்களுக்கு 2,000 ரூபாய் கமிஷனாக கொடுத்தனர்; நேர்மையான தலைமை ஆசிரியர்கள் பலர், பணத்தை பெறவில்லை. நடப்பாண்டில், 1000 ரூபாய் கொடுத்துள்ளனர். பொருட்கள் கொள்முதலில் முறைகேடாக கிடைக்கும் நிதி, அதிகாரிகள், அரசியல்வாதிகள் என, பலருக்கும் போவதாக கூறுகின்றனர். நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment