தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் தொடர வேண்டும். இதற்கான ஆசிரியர்களையும் நியமித்து தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது.முப்பருவ கல்வி முறையில் பாடப் புத்தகங்களைப் பிரித்து வழங்கி, மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.இருப்பினும், கணினித் தொழில்நுட்பங்கள் தொடர்பான பாடத் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி, சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியல் கற்பிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது.கேரளத்தில் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
கைவிடப்பட்ட கணினி பாடம்: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட போது, 6ஆம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்காக புத்தகங்கள் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், ஓராண்டிலேயே திடீரென கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது.
கணினி அறிவியல் பாடம், கடந்த 2004 முதல் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
1,200 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படவில்லை. கணினி அறிவியல் ஆய்வகங்கள் இருந்தும் பாடத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
கணினி அறிவியல் பாடத்துக்கும் நீண்ட காலமாகப் போதிய ஆசிரியர்கள் நியமிக்காமல் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் வேதனை: இதுகுறித்து கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் கூறியதாவது:
மேல்நிலைப் படிப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை ஏராளமான மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்து படிக்கின்றனர். ஆனால், தமிழக அரசுப் பள்ளிகளில் உயர்நிலை வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வந்து பல கோடி ரூபாய் செலவிட்டு புத்தகங்களை அச்சிட்டு வழங்கினர். ஆனால், அவை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பயன்பாடின்றிக் கிடக்கின்றன.
தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், 2,000 பள்ளிகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடத் திட்டம் உள்ளது.
இதற்காக, கடந்த 2004ஆம் ஆண்டில் 1,800 கணினி ஆசிரியர்களையும், அதன் பின்னர் 2010-இல் 190 ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்தனர்.
அதன்பின்னர், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 2,000 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வரவில்லை.
அண்மையில், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 400 பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் இல்லை.
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினிகளும், ஆசிரியர்கள் இல்லாமல் முடங்கிய நிலையில்தான் உள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கு பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் நிலை உள்ளது.
அதிமுக அரசு பொறுப்பேற்றதும் படிப்படியாக கணினிப் பாடம் கொண்டு வரப்படும்; ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல முறை அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
புதிய கல்விக் கொள்கை, மின்யுக இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தில் கணினி அறிவியல் பாடத் திட்டத்தை ஆரம்பப் பள்ளி முதலே கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும்.
பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். பி.எட்., கணினி அறிவியல் முடித்துள்ள 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில் கணினிப் பாடம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பிரிவு உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்து அனுப்பும் பாடப் பிரிவுகளையே நடத்தி வருகிறோம். இதுகுறித்து அரசு தரப்பில்தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
No comments:
Post a Comment