சேலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், பல்வேறு அலுவலக பணிகள் செய்வதாக கூறி, பல ஆசிரியர்கள் பள்ளி பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இதனால், பல பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், 1,488 துவக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிர்வாக வசதிக்காக, ஒன்றியத்துக்கு, ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர்களின் சம்பளம், நிலுவைத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்போது, வாசித்தலே எல்லை என, தமிழ் மொழி வாசித்தலை மேம்படுத்துவதற்கான திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் ஆய்வுப்பணிக்கு செல்வதாக கூறி, ஒன்றியத்துக்கு, 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. மேலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலக பணி உள்ளதாக கூறியும், பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. கற்பித்தல் பணி தவிர மற்ற அலுவலக பணிக்கு, பள்ளி நேரம் முடிந்த பின்பே அழைக்க வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டும், அதை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மதிப்பதில்லை.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளியில் உள்ள ஆசிரியர்களில், ரேஷன் கார்டு கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு சில ஆசிரியர்கள் சென்றுவிடுகின்றனர். வாசித்தலே எல்லை உள்ளிட்ட ஆய்வு பணிக்கும் அனுப்ப வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், அலுவலக பணிக்கு எனவும் அழைக்கின்றனர். இதனால், பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
No comments:
Post a Comment