போலிச் சான்றிதழ்கள் விவகாரம் தொடர்பாக, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த முனிப்பன் என்பவர் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து, ஆசிரியர் பணியாற்றி வந்தார்.
இது குறித்து புகாரின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, போலியாக சான்றிதழ்கள் தயாரித்து பணியில் சேர்ந்த முனியப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இது குறித்து தொடர் விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் போலிச் சான்றிதழ் அளித்த சிலர் பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்க மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் அடங்கிய 5 குழுக்கள் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி அமைத்தார்.
இதையடுத்து, இக்குழு ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் இப்பணியில், தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம்,மொரப்பூர் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நாளொன்று இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின், 10-ஆம் வகுப்பு, ஆசிரியர் பட்டயச் சான்று, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட அசல் கல்விச் சான்றிதழ்கள் குறித்து உண்மைத் தன்மை சரிபார்க்கப்படுகிறது. பின்னர், சான்றிதழ்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தற்போது, இடைநிலை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரது சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி வருகிற ஜன.14-ஆம் தேதி வரை நடைபெறும்.
அதேபோல, வருகிற ஜன.18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment