கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளை மீறி, நுழைவுத் தேர்வு நடத்தி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை நடப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மே 2ம் வாரம் தான், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதற்கு, ஏப்ரலில் விண்ணப்பங்கள் வழங்கலாம். ஆனால், தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடத்துவதால், சட்டப்படி குறிப்பிட்ட தேதிகளில் வருவோருக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது.
இதே போல், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, பெற்றோரின் கல்வித் தகுதியை கேட்கக் கூடாது; எல்.கே.ஜி., வகுப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோருக்கோ, மாணவர்களாக சேர விரும்பும் குழந்தைகளுக்கோ நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது.ஆனால், இந்த விதிகளை எல்லாம் மீறி,சென்ற வாரம் முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. பல மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து விட்டன.பல பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கான பதிவு என்ற முறையில் விண்ணப்பங்கள் வழங்குகின்றன. சில பள்ளிகள், ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று, சேர்க்கை நடத்துகின்றன.இதேபோல், எல்.கே.ஜி.,யில் சேர வரும் குழந்தைகளுக்கு, அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் அடிப்படையிலான,'சாட்' என்ற திறன் தேர்வும் நடத்தப்படுவதால், பெற்றோர் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக, மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் அருமை நாதன் கூறியதாவது: சட்டத்தை பெரும்பாலான பள்ளிகள்மதிப்பதில்லை. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். நன்கொடை என்ற பெயரில், மாணவர்களை சேர்க்க லஞ்சம் வாங்குகின்றனர். எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார், வருமான வரித்துறை மூலமும் சோதனை செய்ய வேண்டும். விதிகளை மீறி, மே மாதத்துக்கு முன் நடத்தும் அனைத்து மாணவர் சேர்க்கையையும், அரசு ரத்து செய்ய வேண்டும். தற்போது மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment