போலிச்சான்றிதழ் விவகாரத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சான்றிதழ்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவற்றை சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர் பணியிடங்களில், போலிச்சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலிச்சான்றிதழ் தயாரித்து கொடுத்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். இவரிடம் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலிச்சான்றிதழ் பெற்று, பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென ஒன்றியம் வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பித்து, சரிபார்த்த பின், நகல் சான்றுகளை சுய சான்றொப்பம் இட்டு ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாளில் இப்பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் சான்றிதழ்களை ஒப்படைக்காத ஆசிரியர்களின் பட்டியலையும் தயாரித்து, அதன் உண்மை தன்மை குறித்த நிலவரத்தையும், அதற்கான அறிக்கையையும் ஒரு வார காலத்துக்குள் சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வுத்தரவுகளை, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment