திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதெடார்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:
சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் உள்ள சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்கள், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். அனைத்து பிரிவினரும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்பட்டவாகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், கல்விச்சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து பணியிடங்களும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இனச் சுழற்சி முறை மற்றும் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே 3 கி.மீ. சுற்றளவு தூரம் ஆகியற்றின் அடிப்படையிலும் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விண்ணப்ப படிவங்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.
காலிப்பணியிடம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் குறித்தும் விண்ணப்பம் வழங்கப்படும் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.29ஆம் தேதிக்குள் அந்தந்த அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment