மழை, வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜனவரி 20-ஆம் தேதி நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுபோல், ஏப்ரல் மாதத் தேர்வுகளையும் மே மாதத்துக்கு தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தொடர் மழை பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழக ஒற்றை இலக்கப் (1,3,5,7,9) பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் ஜனவரி இறுதியில்தான் முடிவடையும். இதனால், வழக்கமாக ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய வகுப்புகள், பிப்ரவரிக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் நடைபெறும் இரட்டை இலக்க (2,4,6,8) பருவத் தேர்வுகளையும் தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:
மழை, வெள்ள பாதிப்பு காரணமாக பருவத் தேர்வுகள் மட்டுமின்றி, டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட இருந்த 36-ஆவது பட்டமளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் பட்டமளிப்பு விழா இப்போது ஜனவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கில் நடத்தப்பட உள்ளது. மேலும், வகுப்புகள் தள்ளிப் போவதால் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் தேர்வுகளை மே முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் சனிக்கிழமைதோறும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் என்றனர்.
No comments:
Post a Comment