பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 4ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. பிளஸ் 2 தேர்வு, வழக்கம் போல், மார்ச் முதல் வாரத்தில், 4ம் தேதி துவங்கி, ஏப்ரல், 1ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, வழக்கத்தை விட முன்கூட்டியே, மார்ச், 15ல் தேர்வு துவங்கி, ஏப்., 13ல் முடிகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும், பல நாள் இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணையை, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்டார்.
தமிழ் கட்டாயம்:
10ம் வகுப்புக்கு மட்டும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கு பதில், இந்த ஆண்டு, ஆறு பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு கூடுதலாக, தங்கள் மாநில மொழி அல்லது தாய் மொழியை, ஒரு தாள் மட்டும் எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூடுதல் மொழிப் பாடம் தேர்ச்சி கணக்கில் எடுக்கப்படாது; தமிழில் எடுக்கும் மதிப்பெண்ணே சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாளில் இப்படித் தான்!
* பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசிக்கலாம். பின், 10:10 முதல், 10:15 மணி வரை, சுய விவர பதிவுக்கும், 10:15 மணி முதல், பகல், 1:15 மணி வரை தேர்வு எழுதவும் அவகாசம் வழங்கப்படுகிறது
* பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 9:15 மணிக்கு துவங்குகிறது. 9:25 வரை வினாத்தாள் வாசிக்கும் நேரம். 9:25 முதல், 9:30 மணி வரை விடைத்தாளில் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 9:30 மணி முதல், 12:00 மணிக்குள் தேர்வு எழுத வேண்டும்.அதிக இடைவெளி அவசியமா?
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நாட்களுக்கு இடையே அதிக நாட்கள் இடைவெளி உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் வீதம் குறைய வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
* பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டு தாள்களுக்கும், இடைவெளியின்றி, தொடர்ந்துதேர்வு நடத்தப்படுகிறது
* வழக்கமாக, கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகள், முன்னுரிமையுடன் நடத்தப்படும். இந்த முறை, இயற்பியல் தேர்வு இறுதி தேர்வாக, ஏப்., 1க்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால், கணினி அறிவியல் பிரிவு மாணவர்கள், மார்ச், 21ல், கணினி அறிவியல் எழுதி விட்டு, இயற்பியல் தேர்வுக்காக, 10 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
* 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் இரு தாள் தேர்வுகள், இடைவெளி இன்றி, தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பின், ஆங்கிலம் இரண்டு தாள்கள் மற்றும் கணித தேர்வுக்கு இடையில், தலா, 5 நாட்கள் இடைவெளி உள்ளது.இந்த இடைவெளி நாட்களை, அரசு பள்ளி மாணவர்கள் சரி வர பயன்படுத்துவரா என்பது சந்தேகம்.
No comments:
Post a Comment