கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின்படி முதல் பாடமாக தமிழில் தேர்வு எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத அனுமதிகேட்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கட்டாய சட்டம்
தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006–ம் ஆண்டு கொண்டுவந்தது. இதன்படி, ‘2006–ம் ஆண்டு முதல் சிறுபான்மை மொழி பள்ளிக்கூடங்களில் உட்பட அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும் முதல் பாடமாக தமிழை கண்டிப்பாக கற்பிக்கவேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கடந்த 2006–ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது, 10–ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு, வருகிற மார்ச் மாதம் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளன. இந்த தேர்வில் இவர்கள், முதல் பாடமான தமிழ் தேர்வு எழுதவேண்டும்.
கோரிக்கை நிராகரிப்பு
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சில மாணவர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். அதில், எங்கள் பள்ளியில் தமிழ் பாடம் நடத்தப்படவில்லை. இதனால், பொதுத்தேர்வில் தமிழுக்கு பதில் தெலுங்கு மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.
ஆனால், இவர்களது கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏற்கவில்லை. மனுக்கள் அனைத்தையும் நிராகரித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், பல மாணவர்கள் தங்களது பெற்றோர் மூலம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தெலுங்கு
அந்த வழக்கு மனுவில், ‘எங்கள் பள்ளியில் எங்களுக்கு தமிழை கற்பிக்கவில்லை. தமிழ் ஆசிரியரையும் நியமிக்கவில்லை. எனவே, பொதுத்தேர்வில் முதல் பாடமாக தமிழை எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழி பாடத்தை எழுத அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 19–ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment