நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு மேலும் இரு வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், எட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள், நீதிபதிகள் இன்றி செயல்படுகின்றன. சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், 2015 மே முதல் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இதனால், 10 ஆயிரத்து, 450 வழக்குகள் தீர்ப்புக்காகவும், 8,245 வழக்குகள் விசாரணைக்காகவும் காத்திருக்கின்றன.
’மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், நுகர்வோர் சமரச தீர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ எனக்கோரி, கோவையை சேர்ந்த, ’கன்சியூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலர் லோகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி அமர்வு, பணியிடங்களை நிரப்ப, நான்கு வாரம் அவகாசம் வழங்கியது. அப்போது, ’இரு வாரங்களில் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என, தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
’தற்போதைய நிலையில், பணியிடங்களை நிரப்புவது சிரமம்; காலஅவகாசம் வழங்க வேண்டும்’ என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கோரினார். இதையேற்ற நீதிபதிகள், பணியிடங்களை நிரப்ப, இரு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணை, டிச., 22க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment