உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சிப்படுத்திய பி.எம்.டி.சி., பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, துருப்பிடித்த பழைய பஸ்களை ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளி வாகனங்களில், ’சிசிடிவி’ கேமரா, ஜி.பி.எஸ்., கருவி, முதலுதவி சிகிச்சை பெட்டி, தீயணைப்பு கருவி, ஜன்னல்களில் இரும்பு கிரில், அவசர கதவுகள், 7 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடிய வாகனங்களை பள்ளி வாகனமாக பயன்படுத்த கூடாது என்பது உட்பட, பல விதிகளை கட்டாயமாக கடைபிடிக்கும்படி, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகள், அவ்வப்போது பள்ளி வாகனங்களை, திடீரென்று ஆய்வு செய்கின்றனர்; விதிகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இந்த வரிசையில், மல்லத்தஹள்ளி அருகிலுள்ள வித்யாநிகேதன் பள்ளிக்கு, மாணவர்களை அழைத்துச் சென்ற, 21 பி.எம்.டி.சி., பஸ்களை நேற்று முன்தினம், அதிகாரிகள் சோதனையிட்டனர்.
பெரும்பாலான பஸ்கள், 7 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடியிருப்பது தெரிய வந்தது. பஸ்சில் பெயரளவில் இருந்த முதலுதவி சிகிச்சை பெட்டிகளில் எந்த மருந்தும் இல்லை. சில பெட்டிகளில் காலாவதியான மருந்துகள் இருந்தன. பஸ்கள் துருப்பிடித்தும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், கதவுகள் சரியாக இயங்காமலும், இருக்கைகள் கிழிந்தும் காணப்பட்டன. பழைய இரும்பு கடைகளுக்கு அனுப்ப வேண்டிய மார்கோபோலோ பஸ்களை, மாணவர்கள் பயணிக்க பி.எம்.டி.சி., வழங்கியதை கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விதிகளை பின்பற்ற தவறிய, 21 பி.எம்.டி.சி., பஸ்களை பறிமுதல் செய்த போக்குவரத்து துறை அதிகாரிகள், பி.எம்.டி.சி., டிப்போ மேலாளர்களுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகமும் கூட, மாணவர்கள் விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 3ம் தேதி, ஜாலஹள்ளி அருகிலுள்ள பி.ஐ.எல்., உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பி.எம்.டி.சி., பஸ்சில் ஸ்ரீரங்கபட்டணாவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சென்னபட்டணா அருகில் செல்லும் போது, மின் கசிவினால், பஸ்சில் தீப்பிடித்தது. டிரைவரின் சாமர்த்திய நடவடிக்கையால், 52 மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த பஸ்சிலும், தீயணைப்பு சாதனம் கிடையாது. இருந்திருந்தால், உடனடியாக தீயை அணைத்திருக்கலாம். இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தாலும், பி.எம்.டி.சி., எச்சரிக்கை அடையவில்லை. விதிகளை பின்பற்றாமல், பள்ளிகளுக்கு பஸ்களை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment