பதிமூன்று மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 20 நாள்களுக்குள் அகற்றுமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலர் வைகோ, மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன் உள்ளிட்ட பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் எல்லைக்கு உள்பட்ட 13 மாவட்ட ஆட்சியர்கள் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 13 மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள சாலையோரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை 20 நாள்களில் வேருடன் அகற்றி அது குறித்த அறிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதேபோல, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முறையே 4 மாதங்கள் மற்றும் 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment