தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதால், பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறிவதோடு, தமிழில் அதற்கான அர்த்தத்தையும் அறியலாம்.
பாக்கெட் டிக்ஷ்னரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால், பள்ளிக்கு எடுத்து வருவதிலும் எந்த சிரமமும் இல்லை. இத்திட்டம், எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபின், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், ஆங்கில பாடத்தில், உரையாடல், கதை விரிவாக்குதல், கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன. பொதுத்தேர்வில், ஆங்கிலம் 2ம் தாளில், கிட்டத்தட்ட, 30 மதிப்பெண்களுக்கு மேலாக, சிந்தித்து எழுதும் வினாக்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதிகளில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற, அகராதி பெரிதும் உதவியாக இருக்கும். எனவே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், அகராதி வழங்க அரசு முன்வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘உயர்கல்வி, வேலைவாய்ப்பு இடங்களில், ஆங்கில மொழி அறிவே திறமைகளை மதிப்பிடும் கருவியாக உள்ளது. பள்ளி மாணவர்களின், ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. இதை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து, செயல்படுத்துவது அவசியம். நடப்பு கல்வியாண்டில், 9ம் வகுப்பு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி வழங்க கல்வித்துறை முன்வர வேண்டும்’ என்றார்."
No comments:
Post a Comment