அரசாணை வெளியிட்டும், அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2011ம் ஆண்டு வரையிலான காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இழுத்தடிப்பதால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த, 2012ல் தமிழக அரசு 110 விதியின் கீழ், அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2011 டிச., வரை காலியாகவுள்ள, 3,120 பணியிடங்களை நிரப்ப அரசாணையை வெளியிட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டதில், 1,420 பணியிடங்கள் நிரப்புவதில் இழுபறி நீடிக்கிறது.
அரசாணை வெளியிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை அதிகாரிகள் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கவேண்டியது அவசியம். லஞ்சம் கொடுக்க மறுக்கும் கல்லுாரி நிர்வாகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் குறிப்பிட்ட சில உதவிபெறும் கல்லுாரிகளில், 1,420 பணியிடங்கள் நிரப்ப அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், 2014-15, 2015-16 ஆகிய இரண்டு கல்வியாண்டிற்கான காலிப் பணியிடங்களை கண்டறிய, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, இன்று முதல் மண்டல வாரியாக அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஆய்வுக்குழு அமைப்பதற்கு பின்னால் பல்வேறு திரைமறைவு வேலைகள் உள்ளதாக, பல்கலை ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலை பேராசிரியர் சங்க மாநில பொதுசெயலர் பசுபதி கூறியதாவது:
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பேராசிரியர்கள் நியமிக்க அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் அரங்கேறுகின்றன. 2012ல் வெளியிட்ட அரசாணையின்படி, காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது.
அதே போன்று, 2012 முதல் 2014 வரையில் எழுந்த, காலிப் பணியிடங்கள் நிரப்பவும் ஒரு சில கல்லுாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2014-15, 2015-16 ஆகிய கல்வியாண்டிற்கான காலிப் பணியிடங்கள் கண்டறிய சிறப்புக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பும் செயல்பாடுகளை வரவேற்கிறோம்.
ஆனால், சிறப்பு குழு அமைத்து ஆய்வுக்கு அனுப்புவது புதிய நடைமுறையாகவுள்ளது. 2001ம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற நடைமுறைகள் இல்லை. தற்போது, குழு வருகையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
அரசாணை வெளியிட்டும், 2011ம் ஆண்டு வரை நிரப்பாமல் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மை அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment