உரிய கல்வித்தகுதி இன்றி, கோவையில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக அம்பலமாகியுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு நடுநிலைப்பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, கலைப்பாடங்கள் கற்பிக்க, கடந்த 2012ல், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில், தகுதியானவர்களின் கல்விச் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், தமிழகம் முழுக்க, 1,500க்கும் மேற்பட்டவர்கள், உரிய கல்வித்தகுதி இல்லாமல், பணியில் சேர்ந்ததாக, புகார் எழுந்துள்ளது.
சம்மந்தப்பட்டவர்களின் கல்வித்தகுதிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு, மதுரையை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் செல்லப்பாண்டிபிள்ளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாவட்ட முதன்மை தகவல் அலுவலர்களிடம் தகவல் கோரியிருந்தார். மற்ற மாவட்டங்களில் இருந்து எந்தத் தகவலும் வராத நிலையில், கோவையில் இருந்து மட்டும், அவருக்கு பதில் தரப்பட்டுள்ளது.
அதன்படி, தேவராயபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி, வால்பாறை, சோலையார் டேம், அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில், ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி முடிக்காதவர்கள், பகுதி நேர ஆசிரியர்களாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமையாசிரியர்கள் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், அரசு தொழில்நுட்ப தேர்வில் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர் செல்லப்பாண்டிபிள்ளை கூறுகையில், ”ஓவிய ஆசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டுமென, பணி ஆணை விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்களின் கவனக்குறைவால், உரிய கல்வித்தகுதி இல்லாதோருக்கு, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மூன்று ஓவிய ஆசிரியர்கள், உரிய கல்வித்தகுதி இல்லாமல், பணியில் சேர்ந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்த பின், முதன்மை கல்வி அலுவலர்கள் மீது, வழக்கு தொடரப்படும்,” என்றார்.
No comments:
Post a Comment